‘பா.ஜ.க. ஒரு அமீபா போன்றது; சமூகத்தில் நுழைந்து அமைதியை சீர்குலைக்கிறது’ - உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்
உத்தவ் சிவசேனாவின் இந்துத்துவ கொள்கை குறித்து பா.ஜ.க. கேள்வி எழுப்ப வேண்டாம் என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.;
மும்பை,
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் நடத்திய உண்ணாவிரத போராட்டம் வன்முறையில் முடிந்தது. இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 80 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது ராஜஸ்தானில் உள்ள ஜோக்பூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் நேற்று உத்தவ் சிவசேனா கட்சி தசரா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
“நாட்டில் தற்போது உரிமைகள் மற்றும் நீதிக்காக போராடுவது தேசவிரோத செயலாக மாறிவிட்டது. இந்திய ராணுவத்திற்காக சூரிய சக்தி கூடாரங்களை அமைத்ததற்காகவும், தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்ததற்காகவும் சோனம் வாங்சுக்கை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வரை புகழ்ந்துகொண்டு இருந்தார். ஆனால் அவர் லடாக்கின் உரிமைகளுக்காக போராட்டத்தை தொடங்கிய தருணத்தில், அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அரசின் எண்ணமும், கொள்கையும் தனக்கு எதிராக போராடுபவர்கள் சிறைக்கு செல்லவேண்டும் என்பதுதான். மராட்டியத்திலும் சிறப்பு பொதுபாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த கூடாது. உத்தவ் சிவசேனாவின் இந்துத்துவ கொள்கை குறித்து பா.ஜ.க. கேள்வி எழுப்ப வேண்டாம். இல்லையெனில் அதன் தலைவர்களை புகைப்படத்துடன் அம்பலப்படுத்துவேன். பா.ஜ.க. முதலில் அதன் கொடியில் இருந்து பச்சை நிறத்தை அகற்ற வேண்டும். பின்னர் சிவசேனாவின் இந்துத்துவத்தை பற்றி பேசவேண்டும்.
பா.ஜ.க. ஒரு அமீபாவை போன்றது. அமீபா அதன் விருப்பத்தின்படி உருவத்தை மாற்றி பரவுகிறது. அதன் விருப்பப்படி கூட்டணியை உருவாக்குகிறது. அதன் வேலை முடிந்ததும் அது மற்றொரு கட்சிக்கு மாறுகிறது. அமீபா உடலுக்குள் நுழையும்போது வயிற்று வலியை ஏற்படுத்தும், அதேபோல பா.ஜ.க. அது சமூகத்தில் நுழையும்போது அமைதியை சீர்குலைக்கிறது.”
இவ்வாறு அவர் கூறினார்.