ரியல் எஸ்டேட் தரகரை கன்னத்தில் அறைந்த பா.ஜ.க. எம்.பி. - வைரலான வீடியோ
பா.ஜ.க. எம்.பி., ரியல் எஸ்டேட் தரகரை கன்னத்தில் அறையும் காட்சிகள் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.;
ஐதராபாத்,
தெலுங்கானாவின் கிரேட்டர் ஐதராபாத் நகரில் மல்காஜ்கிரி பகுதியில் வசித்து வரும் பொதுமக்களில் சிலர் பா.ஜ.க. எம்.பி. ஈதல ராஜேந்தர் என்பவரை நேரில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், சிலர் அவர்களுடைய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என கூறியுள்ளனர்.
இந்நிலையில், மல்காஜ்கிரியில் உள்ள பொச்சாரம் நகராட்சிக்குட்பட்ட ஏகாஷீலா நகர் என்ற இடத்திற்கு தொண்டர்களுடன் ராஜேந்தர் நேற்று சென்றார். அப்போது, சில ரியல் எஸ்டேட் தரகர் ஒருவரும் அந்த பகுதியில் இருந்துள்ளார். உள்ளூர் மக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, அந்த தரகரிடம் பேச சென்ற எம்.பி. திடீரென ஆத்திரத்தில் தரகரின் கன்னத்தில் அறைந்து விட்டார்.
இதனை தொடர்ந்து, அவருடைய தொண்டர்களும் அந்நபரை கடுமையாக தாக்கினர். இதன்பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்தர், நரப்பள்ளி மற்றும் கொர்ரேமுலா கிராமங்களில் ஏழை மக்கள் 1985-ம் ஆண்டு நிலங்களை வாங்கி வீடுகளை கட்டினர். இன்னும் 149 ஏக்கர் பரப்பிலான பயன்படுத்தப்படாத நிலங்கள் பலமுறை திரும்ப திரும்ப விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
இதனால், உண்மையான உரிமையாளர்களுக்கு சொல்ல முடியாத துயரம் ஏற்பட்டு உள்ளது என கூறினார். போலி ஆவணங்களை உருவாக்கி சுரண்டலில் ஈடுபட்டு உள்ளனர் என அதிகாரிகள் மீது அவர் குற்றச்சாட்டு கூறியுள்ளார். அந்த அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
இந்த நிலையில், ரியல் எஸ்டேட் தரகர் உபேந்திரா போலீசில் ராஜேந்தருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். இதன்பேரில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் ரியல் எஸ்டேட் தரகரை கன்னத்தில் அறையும் காட்சிகள் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.