திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவிலிலும் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.;

Update:2025-09-13 23:46 IST

திருவனந்தபுரம்,

கேரளாவில் சமீப காலமாக முதல்-மந்திரி வீடு, கவர்னரின் ராஜ்பவன், விமான நிலையம், கோர்ட்டுகள் போன்ற முக்கிய இடங்களை குறி வைத்து தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் அலுவலகத்துக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.

அதில் பத்மநாபசாமி கோவில் மற்றும் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அவை மாலைக்குள் வெடிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. உடனே பத்மநாபசாமி கோவில் பாதுகாப்பு படை வீரர்களும், போலீசாரும் உஷார் ஆனார்கள். கோவிலில் இருந்த பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு படையினர் மோப்ப நாயுடன் கோவிலுக்குள் நுழைந்து பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதுபோல் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவிலிலும் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அங்கும் வெடி பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை. இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்