ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு 51 சதவீதமாக உயர்த்த வேண்டும்: கர்நாடகா அரசுக்கு ஆணையம் பரிந்துரை

முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோராக சேர்த்து ஆணையம் சிபாரிசு செய்து உள்ளதாக தெரிகிறது.;

Update:2025-04-13 12:11 IST

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவரான ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ரூ.160 கோடி செலவில் நடத்தப்பட்டது. அந்த அறிக்கையை கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் ஜெயபிரகாஷ் ஹெக்டே வழங்கி இருந்தார்.

அந்த அறிக்கை நேற்று முன்தினம் மந்திரிசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதுபற்றி வருகிற 17-ந் தேதி நடைபெறும் சிறப்பு மந்திரிசபை கூட்டத்தில் விரிவாக ஆலோசனை, அந்த அறிக்கையை ஏற்றுக் கொள்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையிலான ஆணையம் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்கவும் சிபாரிசு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

சாதிவாரியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது ஒவ்வொரு சாதி மக்களின் பொருளாதார நிலை உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு இருந்தது. அதன்படி, ஜெயபிரகாஷ் ஹெக்டே தாக்கல் செய்துள்ள அறிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு, பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்கும்படி சிபாரிசு செய்திருப்பதற்கான தகவல்களும் வெளியே கசிந்துள்ளது.

அதன்படி, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருக்கும் லிங்காயத், ஒக்கலிகா உள்ளிட்ட சாதிகளின் இடஒதுக்கீடுவை 32 சதவீதத்தில் இருந்து 51 சதவீதமாக உயர்த்தும்படி அரசுக்கு ஜெயபிரகாஷ் ஹெக்டே சிபாரிசு செய்திருப்பது தெரியவந்துள்ளது. பிற்படுத்தப்பட்ட சமுதாய பட்டியலில் முஸ்லிம்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதாவது முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோராக சேர்த்து சிபாரிசு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

32 சதவீத இடஒதுக்கீடுவை 51 சதவீதமாக உயர்த்தும் போது, பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் ஒவ்வொரு வர்க்கமாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு இடஒதுக்கீடு அதிகரித்து ஜெயபிரகாஷ் ஹெக்டே சிபாரிசு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் கர்நாடகத்தில் அரசியலில் பிரபலமாக இருக்கும் 2 முக்கிய சமுதாயங்களான லிங்காயத் மற்றும் ஒக்கலிகா சமுதாயங்களின் இடஒதுக்கீடும் தலா 3 சதவீதம் அதிகரிக்கும். சாதிவாரி கணக்கெடுப்பில் அந்த 2 சமுதாயத்தினர் தலா 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளதால், அவர்களின் இடஒதுக்கீடுவை தலா 3 சதவீதமாக உயர்த்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதுபோல், முஸ்லிம்களின் எண்ணிக்கை மாநிலத்தில் 75 லட்சத்து 27 ஆயிரம் பேர் இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவர்களின் எண்ணிக்கையை பொறுத்து 4 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக அதிகரிக்கும்படி ஜெயபிரகாஷ் ஹெக்டே சிபாரிசு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக மாநிலத்தில் தலித் சமுதாயத்தினர் 1 கோடிக்கும் மேல் உள்ளதாகவும், அவர்களுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் 75.27 லட்சம் இருப்பதால், அவர்களது இடஒதுக்கீடுவை 8 சதவீதமாக உயர்த்தும்படி சிபாரிசு செய்திருப்பதாக தெரிகிறது.

மேலும் 81 லட்சம் பேர் இருக்கும் சமுதாயத்தினரை 3பி பிரிவில் சேர்த்து, அவர்களுக்கு 8 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும், 72 லட்சம் மக்கள் இருக்கும் சமுதாயத்தினரை 3ஏ பிரிவில் சேர்த்து 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும், 75.27 சதவீத மக்கள் இருக்கும் சமுதாயத்தினரை 2பி பிரிவில் சேர்த்து 8 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும், 77.78 லட்சம் மக்கள் இருக்கும் சமுதாயத்தை 2ஏ பிரிவில் சேர்த்து 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும், 73.94 இருக்கும் சமுதாயத்தினரை 1பி பிரிவில் சேர்த்து 12 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்படியும் சிபாரிசு செய்திருப்பதாக கூறப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துடன் முஸ்லிம்களை சேர்த்திருப்பதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்