75 சதவீத வருகை பதிவு இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதி: சிபிஎஸ்இ உத்தரவு
10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத பள்ளிகளில் மாணவருக்கு 75 சதவீத வருகைப் பதிவு கட்டாயம் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.;
Photo Credit: PTI
சென்னை,
மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்று அழைக்கப்படக் கூடிய சி.பி.எஸ்.இ. நிர்வாகம், தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாணவர்கள் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தகுதி பெற குறைந்தபட்சம் பள்ளிகளில் 75 சதவீத வருகைப் பதிவு கட்டாயம் ஆகும். மருத்துவ அவசரநிலைகள், தேசிய அல்லது சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பது, பிற தீவிர காரணங்களுக்காக செல்வது போன்றவற்றுக்கான ஆவணங்கள் இருந்தால் மேலும் 25 சதவீத தளர்வு வழங்கப்படும். இதனை அனைத்து பள்ளிகளும் முறையாக பின்பற்ற வேண்டும்.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளை திடீரென்று ஆய்வு மேற்கொள்ளும் போது முறையான விடுப்பு பதிவுகள் இல்லாமல் இருப்பதை கண்டறிந்தால், அந்த மாணவர் பள்ளிக்கு வராதவர், போலியானவர் என்பதாக கருதப்படும். அத்தகைய மாணவர்களை சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்காது. மேலும் வருகைப் பதிவுகளை முறையாக பராமரிக்காத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருந்தால் அது குறித்த தகவலை பெற்றோருக்கு முறையாக தெரிவிக்க வேண்டும்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.