இடுக்கி, வயநாடு பகுதிகளில் ரூ.88 கோடியில் புலிகள் சரணாலயம் - மத்திய அரசு பரிசீலனை
இடுக்கி, வயநாடு மாவட்டங்களில் புலிகள் சரணாலயம் அமைக்கப்பட உள்ளது.;
இடுக்கி,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக புலிகளின் தாக்குதலால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மாவட்டத்தில் புலிகள் சரணாலயம் அமைக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இடுக்கி மாவட்டம் மட்டுமல்லாது, வயநாடு மாவட்டத்திலும் தனியாக புலிகள் சரணாலயம் அமைக்கப்பட உள்ளது. இந்த 2 மாவட்டங்களிலும் இரண்டு கட்டங்களாக ரூ.88.7 கோடி செலவில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை, தேசியபுலிகள் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை சார்பில் புலிகள் சரணாலயம் அமைக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சரணாலயம் பகுதியில் புலிகளை கண்காணிப்பதற்காக சிறப்பு கண்காணிப்பு படை அமைக்கப்படும். வயர்லெஸ் கருவி, கேமரா ஆகியவை கண்காணிப்பு படைக்கு வழங்கப்படும். உள்ளூர் பகுதியை சேர்ந்த 5 வாலிபர்கள் இதில் இடம் பெறுவார்கள். அவர்களுக்கு டெலி இன்ஜெக்ட் துப்பாக்கிகள், பாதுகாப்பு வாகனங்கள், தேவையான மருந்துகள், டிரோன் ஆகியவை வழங்கப்பட உள்ளது.
சரணாலயம் அமைக்கப்படும் பகுதிகளில் அதிநவீன கேமராக்களை வைத்து புலிகள் நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் பெரியார் புலிகள் சரணாலயம் உள்ளது. இந்த பகுதியில் தான் புதிய சரணாலயம் அமைப்பதற்கு விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.