கையில் சிகரெட், போதையில் பாலியல் சீண்டல்; நபரின் வீடியோவை வெளியிட்ட இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பாதிக்கப்பட்ட நபர் மீதே குற்றம் சுமத்தும் கலாசாரம் காணப்படுகிறது என்று இளம்பெண் சுட்டி காட்டியிருக்கிறார்.;
புதுடெல்லி,
டெல்லியை சேர்ந்த பாவனா சர்மா என்ற இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற நபர் ஒருவரை படம் பிடித்து காட்டியிருக்கிறார்.
சிவாஜி மார்கெட் பகுதியில் இரவு 9 மணியளவில் நடந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தபோது, அவருக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் வெளியிட்ட பதிவில், குடிபோதையில் இருந்த அந்த நபர் தெருவில் பாவனாவை பின்தொடர்ந்து சென்றுள்ளார். தகாத வகையில் தொட்டிருக்கிறார். இதனால், பாதுகாப்பற்ற உணர்வை பாவனாவுக்கு ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த சம்பவம் மேற்கு டெல்லியின் பரபரப்பு நிறைந்த பகுதியில் நடந்திருக்கிறது. இதனை பற்றி வெளியே தெரிவிக்க வேண்டும் என முடிவு செய்த பாவனா, அந்த நபர் சிகரெட் புகைத்து கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை படம் பிடித்துள்ளார். அவர் கையில் சிகரெட்டுடன், கண்ணடிக்கும் காட்சிகளும் உள்ளன.
பாலியல் தொந்தரவில் ஈடுபடும் நபர். எச்சரிக்கையாக இருங்கள் என தலைப்பிட்டு, பாவனா பகிர்ந்துள்ள வீடியோவில், இருட்டில் கையை அந்நபர் தொட்டார். தண்டனை கிடைக்கும் என்ற அச்சமே இல்லை என தெரிவித்து இருக்கிறார்.
தொடர்ந்து, அருகேயிருந்த காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்த அவர், கடும் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் கேட்டு கொண்டார்.
ஆனால், அதன்பின்னர் நடந்த கொடுமையையும் கூறியிருக்கிறார். சமூக ஊடகத்தில் விமர்சனம் வெளியிட்ட பலரும், ஏன் இந்த ஆடையை அணிந்து இருக்கிறீர்கள்? இரவில் ஏன் வெளியே செல்கிறீர்கள்? என்பன போன்ற கேள்விகளை ஆண்கள் பலர் கேட்டுள்ளனர் என பாவனா வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்.
டி-சர்ட் மற்றும் பைஜாம அணிந்திருந்தேன். ஒப்பனை செய்து கொள்ளவில்லை. ஆனால் எனக்கு அது சரி என அவர் தெரிவித்து உள்ளார். எனினும், பாதிக்கப்பட்ட நபர் மீதே குற்றம் சுமத்தும் கலாசாரம் காணப்படுகிறது என்று அவர் சுட்டி காட்டியிருக்கிறார்.
நான், விழிப்புணர்வு ஏற்படுத்த வீடியோவை வெளியிட்டேன். அவமதிப்பு செய்யவோ அல்லது என் மீது தாக்குதல் நடத்தவோ இல்லை. ஆனால், வருகிற விமர்சனங்கள் உணர்வுரீதியாக என்னை பலவீனப்படுத்துகிறது என பதிவிட்டு உள்ளார்.