இமாசல பிரதேசத்தில் கன மழை; வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி, பலர் மாயம்
மேகவெடிப்பால் பெய்த மழையால் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது;
சிம்லா,
இமாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது. அம்மாநிலத்தில் பிரபல சுற்றுலா மலை நகரமான சிம்லா, சம்பா, குலு உள்ளிட்ட பகுதியில் மேக வெடிப்பால் கன மழை கொட்டித்தீர்த்தது.
பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. சிம்லா பட்டாக்குப்பரில் 5 மாடி கட்டிடம் நொடிப்பொழுதில் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அதில் வசித்து வந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதில் உயிர் சேதம் எதுவும் ஏற்பட வில்லை. அந்த கட்டிடத்தின் அருகில் இருக்கும் 2 கட்டிடங்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
நிலச்சரிவுக்கு பல வீடுகள் இடிந்தது. சாலைகளில் கற்கள் விழுந்து கிடப்பதாலும், சேதமாகி கிடப்பதாலும் 259 சாலைகள் மூடப்பட்டு உள்ளன. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. மண்டியில் மேகவெடிப்பால் பெய்த மழையால் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான சம்பவங்களினால் 4 பேர் பலியாகியுள்ளனர். பலர் மாயமாகி விட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு இருக்கிறது.