காங்கிரஸ் கட்சி மக்களிடையே சாதி, மத மோதலை உருவாக்குகிறது: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
பீகாரின் சசராம் நகரில் நடந்த தேர்தல் பேரணியில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார்;
சசராம்,
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதன்படி, முதல்கட்ட தேர்தல் கடந்த 6-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்து முடிந்தது. இதில் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதனை தொடர்ந்து, 2-வது கட்ட தேர்தல் வருகிற செவ்வாய் கிழமை நடைபெற உள்ளது. இதற்கான பிரசார பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பீகாரின் சசராம் நகரில் நடந்த தேர்தல் பேரணியில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, பீகாரில் வாக்குகள் திருடப்படுகின்றன என ராகுல் காந்தி நினைக்கிறார் என்றால், அதுதொடரபாக தேர்தல் ஆணையத்திடம் அவர் புகார் அளிக்க வேண்டும் என்றார்.
காங்கிரஸ் கட்சி மக்களிடையே சாதி, மதம் மற்றும் அடிப்படை கோட்பாடுகள் சார்ந்த மோதலை உருவாக்குகிறது என அப்போது அவர் குற்றச்சாட்டாக கூறினார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, இந்தியா யாரையும் தூண்டி விடும் வகையில் செயல்படாது. ஆனால், எங்களை யாராவது தூண்டி விட்டால், அவர்களை நாங்கள் தப்பி செல்ல விடமாட்டோம் என்று பேசியுள்ளார்.