'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு - பேராசிரியருக்கு கோர்ட்டு இடைக்கால ஜாமீன்
24 மணி நேரத்திற்குள் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து அலி கானை விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.;
புதுடெல்லி,
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையில், இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து பேஸ்புக்கில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக அரியானா மாநிலத்தில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் அலி கான் முகமதாபாத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், பேராசிரியர் அலி கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
அதே சமயம் 24 மணி நேரத்திற்குள் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து அலி கானை விசாரிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு குறித்து பேஸ்புக்கில் பதிவிடக் கூடாது என்றும், பேராசிரியர் ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும் நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.