மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: இந்தியாவில் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது
கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.;
புதுடெல்லி,
2019-ம் ஆண்டு உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்று, மீண்டும் மீண்டும் புதுப்புது வடிவங்களில் உருமாறி மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. தற்போதும் ஒரு புதிய வடிவத்தில் வந்துள்ளது. தொடக்கத்தில் ஒன்று, இரண்டு என எண்ணிக்கை தொடங்கிய தொற்று, தற்போது 4 ஆயிரத்தை கடந்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக குஜராத்தில் புதிதாக 59 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்துக்கு அடுத்தபடியாக, கர்நாடகத்தில் 58 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 41 பேருக்கும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக 26 பேருக்கு பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மீண்டும் வேகமெடுக்கும் கொரோனாவால், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மராட்டியத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். அதேநேரம் ஒரே நாளில் 512 பேர் பெருந்தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இந்த நேரத்தில், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும், ஆனால் கவலைப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.