துபாய் பட்டத்து இளவரசர் நாளை இந்தியா வருகை; பிரதமர் மோடியை சந்திக்கிறார்
துபாய் பட்டத்து இளவரசர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி, பாதுகாப்புத்துறை மந்திரியை சந்திக்கிறார்.;
டெல்லி,
2 நாட்கள் அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்–தான் பின் முகம்–மது பின் ராஷித் அல் மக்–தூம் நாளை இந்தியா வருகிறார். துபாய் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்றப்பின் மக்டோம் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும். மக்டோம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதம மந்திரியாகவும், பாதுகாப்புத்துறை மந்திரியாகவும் செயல்பட்டு வருகிறார்.
நாளை இந்தியா வரும் துபாய் பட்டத்து இளவரசர் அல் மக்–தூம் பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இதையடுத்து, இளவரசர் அல் மக்–தூம்மிற்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கிறார்.
இதனை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை அல் மக்–தூம் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா இடையேயான உறவு, வர்த்தகம், தொழில் உள்பட பல்வேறு துறைகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
அதேவேளை, நாளை மறுதினம் இந்தியா - ஐக்கிய அரபு அமீரக தொழிலதிபர்கள் கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திலும் துபாய் பட்டத்து இளவரசர் அல் மக்–தூம் பங்கேற்க உள்ளார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.