டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: சிறப்பு புலனாய்வு குழுவை உருவாக்கிய என்.ஐ.ஏ.

டெல்லி செங்கோட்டை பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பின் புதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.;

Update:2025-11-12 11:59 IST

புதுடெல்லி,

டெல்லி செங்கோட்டை எதிரே நேற்று முன்தினம் இரவு ஹூண்டாய் ஐ-20 கார் வெடித்துச் சிதறியது. இந்த காரைப் பற்றி போலீசார் துப்பு துலக்கினார்கள். 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதன்மூலம் கார் பற்றி பல்வேறு தகவல்கள் கிடைத்து உள்ளன. வெடித்த கார், வெள்ளை நிறத்திலானது. அது பரிதாபாத் செக்டார் 37-ல் உள்ள ‘ராயல் கார் ஷோன்’ என்ற நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்டு உள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டார்.

சம்பவம் தொடர்பாக காரின் முதல் உரிமையாளர் முகமது சல்மான், அரியானாவில் கைது செய்யப்பட்டார். இது அரியானாவில் பதிவு செய்யப்பட்ட கார் ஆகும். 2014-ம் ஆண்டு இந்த கார் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்பிறகு டெல்லியில் ஒருவருக்கு இந்த காரை சல்மான் விற்றுள்ளார். இதன்பிறகு 2 கைகள் மாறி ஜம்மு காஷ்மீர் புல்வாமாவைச் சேர்ந்த அமீர் என்பவருக்கு விற்றுள்ளார். அவர் உமர் முகமதுவுக்கு கொடுத்துள்ளார்.

இப்படி பல கைகள் மாறிய காரை, திட்டமிட்டே இந்த கொடுஞ்செயலுக்கு உமர் முகமது பயன்படுத்தியிருப்பார் என கூறப்படுகிறது. இவர்களில் சல்மானிடம் இருந்து காரை வாங்கிய நபரும் போலீசில் பிடிபட்டு உள்ளார். டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்துக்கு காரணமானதாக கூறப்படும் டாக்டர் உமரின் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போனது. ஏற்கனவே உமரின் தாயார் சமீமா பேகம் மற்றும் 2 சகோதரர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

வெடிவிபத்தில் இறந்த உமரை அடையாளம் காணும் வகையில், சமீமாபேகத்துக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும் டாக்டர் உமரின் தந்தை குலாம் நபி பாத் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவருக்கும் டி.என்.ஏ. பரிசோதனை நடக்கிறது. மேலும் உமருடன் பணியாற்றிய 3 டாக்டர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கார் பற்றிய மேலும் ஒரு கண்காணிப்பு கேமரா பதிவு போலீசாரிடம் சிக்கி உள்ளது. அந்த காருக்கு டெல்லி செங்கோட்டை அருகே கடந்த மாதம் 29-ந்தேதி மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வாங்கியதற்கான ஆதாரம் அதில் கிடைத்திருக்கிறது. 3 வாலிபர்கள் அந்த வீடியோவில் உள்ளனர். அவர்களுக்கும் இந்த நாசவேலையில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகத்து போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.

டெல்லியில் கார் வெடித்த இடத்தில் போலீசாரும், தடயவியல் நிபுணர்களும் ஆதாரங்களை சேகரித்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு சிலிண்டரும் கிடந்தது. அது சமையல் கியாஸ் சிலிண்டர் அல்ல. வேறு வித சிலிண்டர் ஆகும். இதனை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது எங்கிருந்து விழுந்தது? இதனையும் வெடிக்க முயற்சி செய்தனரா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் டெல்லி செங்கோட்டை பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பின் புதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

இந்த சூழலில் டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து என்ஐஏ தீவிர விசாரணை நடத்தி வந்தநிலையில், பயங்கரவாத சதித்திட்டம் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்ததை அடுத்து, தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) 10 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

டெல்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகும் தேசியத் தலைநகரம் தற்போது மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு சோதனைகள் மற்றும் நகரம் முழுவதும் முக்கிய இடங்களில் வாகனங்களை பெருமளவில் சோதனை செய்வது ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நகரத்தின் பாதுகாப்பு நிலைமையை மறுபரிசீலனை செய்ய டெல்லி போலீசார், புலனாய்வுப் பணியகம் மற்றும் துணை ராணுவப் படையினரிடையே சந்திப்புகள் நடத்தப்பட்டன.

இதனிடையே டெல்லியில் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தோட்டாக்கள் உள்பட 40 மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. வெடிபொருட்கள், இரு தோட்டாக்கள் உள்ளிட்ட மாதிரிகளை தடயவியல் நிபுணர்கள் சோதித்துள்ளனர்.

டெல்லி கார் குண்டு வெடிப்பில் இறந்தவர்களில் 6 பேரின் உடல்களை பச்சை குத்தியதை வைத்து உறவினர்கள் அடையாளம் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

முகம், உடல் சிதைந்ததால் பிற அடையாளங்களை வைத்தும் யார் என உறவினர்கள் கண்டறிந்துள்ளனர். இறந்த 13 பேரில் 6 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் நுரையீரல், செவிப்பாறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு பலர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்