டெல்லி கார் வெடிப்பு; மேலும் ஒரு டாக்டர் கைது

கைதானவர்களில் 2 பேர் துருக்கி சென்று திரும்பியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-11-13 10:32 IST

புதுடெல்லி,

நாட்டையே உலுக்கிய டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) தீவிரமாக விசாரித்து வருகிறது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகளும், தடயவியல் சோதனை நிபுணர்களும் சென்று அங்குலம் அங்குலமாக தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த விசாரணைக்காக 10 பேர் கொண்ட சிறப்புக்குழுவை அமைத்துள்ளது. போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதற்கு மேலான பதவிகளில் உள்ள அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்த குழு செயல்பட இருக்கிறது. இந்த சிறப்புக்குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையில் பல தகவல்கள் கிடைத்து உள்ளன. இந்த கார் வெடிப்பு சம்பவத்துக்கு, பல மாதங்களுக்கு முன்பே திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளன. இதனை கடந்த மாதத்தின் மத்தியில்தான் போலீசார் கவனித்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் கடந்த 3 நாட்களாக தடயங்களை சேகரித்து வருகிறார்கள். இதுவரை 2 தோட்டாக்கள், சிதைந்த விரல்கள், உடல் பாகங்கள், தலை இல்லாத ஒரு உடல் மற்றும் ரசாயன எச்சங்கள் என மொத்தம் 40-க்கும் மேற்பட்ட தடயங்கள் அங்கு சேகரிக்கப்பட்டு உள்ளன. அவை பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. கார் வெடிப்பில் இறந்தவர்களில் இன்னும் சில உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என கூறப்படுகிறது. பிரேத பரிசோதனையில் உடல்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பார்க்கும்போது சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டது மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் என கண்டறியப்பட்டு உள்ளது.

இதினிடையே காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகமதுவுக்கு ஆதரவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. அவ்வழக்கில் தேடப்பட்டு வந்த காஷ்மீர் டாக்டர் முசாமில், அரியானா மாநிலம் பரிதாபாத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரது வாடகை வீட்டில் 360 கிலோ வெடிபொருட்களும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. அவர் பரிதாபாத்தில் அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரைப்போல், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த மேலும் ஒரு டாக்டர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த கும்பலை சேர்ந்த பெண் டாக்டர் ஷாகீன், லக்னோவில் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் இளைஞர்களை அடையாளம் கண்டு மூளைச்சலவை செய்து பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததும், நிதி திரட்டியதும், ஆயுதங்கள் கொள்முதல் செய்ததும்,வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில், இந்த கும்பலுக்கு உதவிய மவுலவி இஷ்தியாக் என்பவர் பிடிபட்டார். இவர் அரியானா மாநிலம் மேவாட்டை சேர்ந்தவர். காஷ்மீர் போலீசாரும், அரியானா போலீசாரும் இணைந்து நடத்திய தொடர் வேட்டையில் அவர் சிக்கினார்.

அவர் பயங்கரவாத தொடர்புக்கு மையப்புள்ளியாக திகழ்ந்த அல் பலாஹ் பல்கலைக்கழக வளாகத்தில் மத போதனைகள் நிகழ்ச்சி நடத்தி வந்தார்.இவரது வாடகை வீட்டில்தான் 2,500 கிலோ எடையுள்ள வெடிபொருட்களை டாக்டர் முசாமிலும், டெல்லி கார் வெடிப்புக்கு முக்கிய காரணமான டாக்டர் உமரும் பதுக்கி வைத்திருந்தனர். அதற்கு மவுலவி இஷ்தியாக் உதவி செய்ததாக தெரியவந்துள்ளது.எனவே, அவரை விசாரணைக்காக ஸ்ரீநகருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது. இவ்வழக்கில் பிடிபட்ட 9-வது நபர் இவர் ஆவார்.

இந்தநிலையில், டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் மேலும் ஒரு டாக்டரை என்ஐஏ சிறப்புக்குழு அதிரடியாக கைது செய்துள்ளது. குண்டுவெடிப்பு சம்பவத்தில் பெண் டாக்டர் உட்பட 6 பேர் கைதான நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர்களில் இருவர் துருக்கி சென்று திரும்பியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளநிலையில், கைதானவர்களின் வெளிநாட்டு தொடர்புகள் குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்