டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா மீது 35 வயது மதிக்கத்தக்க நபர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவை நபர் ஒருவர் திடீரென தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா இன்று காலையில் சிவில் லைன்சில் உள்ள தனது இல்லத்தில் மக்கள் குறை கேட்கும் நிகழ்வில் பங்கேற்றபோது, இந்த தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களிடம் குறைகளை கேட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், முதல்-மந்திரி ரேகா குப்தாவிடம் சில ஆவணங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் திடீரென, ரேகா குப்தாவை தாக்கினார். இதனால் அங்கு பெரும் குழப்பம் நிலவியது. இதில் ரேகா குப்தாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல் நடத்திய நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் அவர் குஜராத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. முதல்-மந்திரி மீதான இந்த தாக்குதலுக்கு டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா கண்டனம் தெரிவித்துள்ளார்.