டெல்லி: கள்ளக்காதல், கர்ப்பம்... இரட்டை படுகொலையில் முடிந்த சோகம்
ஷாலினி கர்ப்பிணியாக இருக்கிறார் என்றும் அந்த குழந்தை தன்னுடையது என்றும் ஆசு கூறினார்.;
மேல்படம்: ஆசு
புதுடெல்லி,
டெல்லியின் மத்திய பகுதியில் ராம் நகர் என்ற இடத்தில் வசித்து வருபவர் ஆகாஷ் (வயது 23). இ-ரிக்சா ஓட்டுநர். இவருடைய மனைவி ஷாலினி (வயது 22). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவி இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால், கணவரை பிரிந்த ஷாலினிக்கு, ஆசு என்ற சைலேந்திரா (வயது 34) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் பல குற்ற செயல்களில் ஈடுபட்டவர். இந்நிலையில், ஷாலினிக்கும், கணவர் ஆகாசுக்கும் இருந்த தகராறு முடிவுக்கு வந்து ஒன்றாக வசிக்க தொடங்கினர்.
ஆனால், ஷாலினி கர்ப்பிணியாக இருக்கிறார் என்றும் அந்த குழந்தை தன்னுடையது என்றும் ஆசு கூறினார். ஆனால், ஆகாஷ் தான் அதன் தந்தை என ஷாலினி கூறியுள்ளார். இது ஆசுவுக்கு ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது. தவிர, அவரை பிரிந்து கணவருடன் சேர்ந்ததும் கூடுதலாக ஆத்திரம் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், ஷாலினி அவருடைய தாயாரான ஷீலாவை பார்ப்பதற்காக கணவரை அழைத்து கொண்டு குதுப் சாலை பகுதிக்கு சென்றுள்ளார். நேற்றிரவு வீடு அருகே சென்றபோது, திடீரென வந்த ஆசு, ஆகாஷ் மீது கத்தியால் தாக்கியுள்ளார். ஆனால், உஷாரான அவர் அதனை தடுத்து விட்டார். இதனால், இ-ரிக்சாவில் இருந்த ஷாலினியை கவனித்த ஆசு, ஓடி சென்று அவரை பலமுறை கத்தியால் குத்தினார்.
அதனை தடுக்க முயன்ற ஆகாஷையும் ஆசு கடுமையாக தாக்கினார். ஆனால், அதனை தடுத்து கத்தியை பறித்து, பதிலுக்கு ஆசுவை ஆகாஷ் குத்தினார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ஷாலினி மற்றும் ஆகாஷ் ஆகிய இருவரையும் ஷாலினியின் சகோதரர் ரோகித் மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றார். எனினும், ஷாலினி மற்றும் ஆசு உயிரிழந்து விட்டனர் என டாக்டர்கள் தெரிவித்தனர். ஆகாசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.