நன்கானா சாகிப் குருத்வாராவை இந்திய டிரோன் தாக்கியதா? - மத்திய அரசு விளக்கம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போர் நிறுத்தப்பட்டுள்ளது.;

Update:2025-05-11 09:33 IST

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தளபதிகள் உள்பட 100 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதலை நடத்தின. தொடக்கத்தில் காஷ்மீர் மாநில எல்லையோர மாவட்டங்களில் சிறிய ரக பீரங்கி தாக்குதலை நடத்திய பாகிஸ்தான், திடீரென்று டிரோன்களை ஏவின. அவை அனைத்தையும் இந்தியா முறியடித்தது.

காஷ்மீரை தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கெல்லாம் தக்க பாடம் கற்பிக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போர் நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தானின் நன்கானா சாகிப் குருத்வாராவை இந்தியாவின் டிரோன் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ காட்சி பரவி வருகிறது. இதுபோல சமூக ஊடகங்களில் பரவும் போலியான தகவல்கள் பற்றி இந்திய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு, விளக்க அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அதில், இந்தியாவில் மதவாத வெறுப்பைத் தூண்டுவதற்காக இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன. நன்கானா சாகிப் என்பது சீக்கியர்களின் முக்கிய குருமார்களில் ஒருவரான குருநானக் பிறந்த இடமாகும். அங்குள்ள குருத்வாரா, சீக்கியர்களின் முக்கிய புனிதத்தலமாக கருதப்படுகிறது. ஏராளமான சிக்கியர்கள் அங்கு புனித யாத்திரை சென்று வருவார்கள். இதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பரப்பப்படும் தகவல் வதந்தியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்