டிஜிட்டல் கைது மோசடி; போலீஸ் என்று கூறி 2 பெண்களை நிர்வாணப்படுத்தி கேலி செய்த அவலம்

மோசடிக்காரர்கள் கூறியதை நம்பி, பாதிக்கப்பட்ட பெண்கள் ரூ.58,447 பணத்தை அனுப்பி வைத்துள்ளனர்.;

Update:2025-07-23 17:18 IST

பெங்களூரு,

தொழில்நுட்ப வளர்ச்சியால் நமது வாழ்வை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நவீன கண்டுபிடிப்புகள் நாள்தோறும் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம், தொழில்நுட்ப வளர்ச்சியை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தி, அப்பாவி மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் கும்பலும் மற்றொரு புறத்தில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் 'டிஜிட்டல் கைது' என்ற மோசடி வலையில் சிக்கி பலர் தங்கள் பணத்தையும், நிம்மதியையும் இழந்துள்ளனர். 'டிஜிட்டல் கைது' என்பது, மோசடி கும்பல் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளை போல பேசி பொதுமக்களை வீட்டில் சிறை பிடித்து பணம் பறிப்பதாகும். இதுபோன்ற டிஜிட்டல் கைது மோசடிகள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன.

இந்த மோசடியை தடுக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு வழிகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் தற்போது வரை இத்தகைய டிஜிட்டல் கைது மோசடிகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் பெங்களூவை சேர்ந்த 2 பெண்கள் 'டிஜிட்டல் கைது' மோசடியில் சிக்கி பணத்தை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பெண்கள் ரிச்சா மற்றும் அனிதா(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இதில் ரிச்சா தாய்லாந்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ரிச்சா, தனது தோழி அனிதாவை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 17-ந்தேதி காலை 11 மணியளவில் ரிச்சாவிற்கு ஒரு புதிய எண்ணில் இருந்து மொபைல் அழைப்பு வந்துள்ளது. போனில் பேசிய நபர் தன்னை மும்பை காவல்துறையை சேர்ந்த அதிகாரி என்றும், மும்பை கொலாபா காவல் நிலையத்தில் இருந்து பேசுவதாகவும் கூறியுள்ளார். ஆள்கடத்தல், கொலை, பணமோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ரிச்சாவிற்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை ரிச்சா மறுத்தபோது, ரிச்சாவின் ஆதார் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்ட தனிப்பட்ட ஆவணங்களின் விவரங்களை அந்த நபர் துல்லியமாக கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ந்த ரிச்சா, அந்த நபரை உண்மையான காவல்துறை அதிகாரி என்று நம்பிவிட்டார். ரிச்சாவுடன் இருந்த அவரது தோழி அனிதாவும் இந்த மோசடி வலையில் வசமாக சிக்கிக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து 2 பெண்களையும் 'டிஜிட்டல் கைது' செய்வதாக மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து வீடியோ கால் மூலம் 2 பெண்களையும் சிலர் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவர்கள் தங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறிக் கொண்டனர். எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு செல்லக் கூடாது, யாரையும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று அவர்கள் மிரட்டியுள்ளனர்.

தங்களுக்கு என்ன நடக்கிறது? என்பதை புரிந்து கொள்ள முடியாமல் திகைத்த 2 பெண்களும், மோசடிக்காரர்கள் கூறிய அனைத்திற்கும் உடன்பட்டனர். இதற்கிடையில், இந்த வழக்கில் இருந்து எந்த பிரச்சினையும் இல்லாமல் தப்பிக்க வேண்டும் என்றால் தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புமாறு மோசடிக்காரர்கள் கூறியதை நம்பி, ரூ.58,447 பணத்தை ரிச்சாவும், அனிதாவும் அனுப்பி வைத்துள்ளனர்.

அது மட்டுமின்றி, கைது செய்யப்பட்டவர்களின் உடலில் காயங்கள், தழும்புகள் மற்றும் மச்சங்கள் இருக்கிறதா? என்பதை பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி, கேமரா முன்பு அந்த 2 பெண்களையும் நிர்வாணமாக நிற்க வைத்துள்ளனர். அப்போது வீடியோ காலில் மறுபுறத்தில் பேசிய நபர்கள் சிலர், 2 பெண்களையும் கேலி செய்து இழிவாக பேசியுள்ளனர்.

விசாரணை என்ற பெயரில் சுமார் 9 மணி நேரமாக நீண்ட கொடுமைகளுக்கு பிறகு, ரிச்சா ஒருவழியாக இரவு 8 மணியளவில் தனது மற்றொரு தோழியை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை விவரித்துள்ளார். இதைக் கேட்ட அந்த தோழி, உடனடியாக அனைத்து அழைப்புகளையும் துண்டித்துவிட்டு காவல்துறையிடம் இது குறித்து புகார் அளிக்கும்படி கூறியுள்ளார். அதன் பிறகுதான் இது ஒரு மோசடி என்பதை 2 பெண்களும் உணர்ந்துள்ளனர்.

தொலைபேசி அழைப்பை துண்டித்த பிறகு மோசடிக்காரர்கள் மீண்டும் அந்த பெண்களை தொடர்பு கொண்டு, அவர்களின் நிர்வாண படங்களை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதையடுத்து ரிச்சாவும், அனிதாவும் இது குறித்து பனஸ்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக சைபர் கிரைம் மோலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்