டெல்லியில் ஆம் ஆத்மி முன்னாள் மந்திரி வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

அமலாக்கத்துறையின் சோதனை முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது என்று ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.;

Update:2025-08-26 15:04 IST

புதுடெல்லி,

டெல்லி முன்னாள் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவருமான சவுரவ் பரத்வாஜ் வீடு உட்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை  இன்று சோதனை நடத்தியுள்ளது. ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் மருத்துவமனை கட்டுமான ஒப்பந்தங்களில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2018–19ல் ரூ.5,590 கோடி மதிப்பில் 24 மருத்துவமனைகள் கட்ட, மேம்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்திர குப்தா புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு ஆணையம் பரத்வாஜ் மற்றும் சத்யேந்திர ஜெயினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. சோதனையில் சில திட்டங்கள் மதிப்பீட்டை மீறியும் முடிக்கப்படாமல் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. இந்நிலையில் இன்று அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றுள்ளது. இந்தச் சோதனை ஒரே நேரத்தில் 13 இடங்களில் நடைபெற்றாலும் கூட இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

அமலாக்கத்துறையின் சோதனை முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது என டெல்லி முன்னாள் முதல் மந்திரி அதிஷி கூறியுள்ளார். “சவுரவ் வீடு, சொந்தமான இடங்களில் இன்று சோதனை நடத்தப்பட்டது ஏன் தெரியுமா?. பிரதமர் மோடியின் பட்டச் சான்றிதழ் தொடர்பாக கேள்வி எழுப்பப்படுவதால், அதிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப இந்தச் சோதனை நடத்தப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்