ஓடும் ரெயிலில் ஏற முயன்று தவறி விழுந்த முதியவர் - துரிதமாக செயல்பட்ட காவலர்
அங்கு பணியில் இருந்த ரெயில்வே காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு முதியவரை காப்பாற்றினார்.;
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் பெதுல் ரெயில் நிலையத்தில், விசாகப்பட்டினம் வரை செல்லும் ரெயிலானது, நடைமேடையில் நின்று கொண்டிருந்தது. அதில் ஏற வேண்டிய முதியவர் ஒருவர், செல்போனை மும்முரமாக பார்த்து கொண்டிருந்தார். இந்த நிலையில் ரெயில் அந்த நிலையத்தில் இருந்து புறப்படத்தொடங்கியது. ரெயில் சிறிது தூரம் நகர்ந்ததும், அதை கவனித்த அவர் ஓடிச் சென்று ஏற முயன்றார்.
அப்போது, கால் தவறி கீழே விழுந்து, ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் அவர் சிக்க இருந்த நிலையில் அங்கு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் ஒருவர் துரிதமாக செயல்பட்டு முதியவரை காப்பாற்றினார்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது இணையத்தில் பரவி வருகிறது. துரிதமாக செயல்பட்டு முதியவரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.