ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணையும் ஐக்கிய ஜனதா தளம் முன்னாள் எம்.பி. - பரபரக்கும் பீகார் தேர்தல் களம்
பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.;
பாட்னா,
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ம் தேதியும், இரண்டாம்கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்தமாதம் 11ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே, பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளம், பாஜக இடையேயான ஆளும் கூட்டணியில் மாநில முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார். அதேவேளை, எதிர்க்கட்சிகளாக உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.
அதேவேளை, நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சந்தோஷ் குஷ்வாலா. இவர் அக்கட்சியின் பூர்ணியா தொகுதி முன்னாள் எம்.பி. ஆவார்.
இந்நிலையில், சந்தோஷ் குஷ்வாலா இன்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. கிரிட்ஹரி மற்றும் முன்னாள் எம்.பி. ஜக்தீஷ் சர்மா ஆகியோரின் மகன்களான சாணக்ய பிரகாஷ் ராஜன், ராகுல் சர்மா ஆகியோரும் இன்று ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வு பீகார் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.