விநாயகர் சிலை கொண்டு சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி
விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.;
அமராவதி,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்கள் சார்பிலும், இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு வழிபாட்டு குழுவினர் மற்றும் அந்தந்த பகுதி சங்கங்கள் சார்பிலும் பொது இடங்களில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்தனர்.
இதேபோல் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். பின்னர் அந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. முதல் நாளில் இருந்தே சிலைகள் கரைக்கப்படுகின்றன.
அந்த வகையில் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. முன்னதாக விநாயகர் சிலைகள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில், அம்மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டம் நர்சபுரம் மண்டல் பகுதியில் டிராக்டரில் விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அந்த டிராக்டரில் சிறுவர்கள் உள்பட பலர் அமர்ந்திருந்தனர்.
அப்போது, விநாயகர் சிலையை கொண்டு சென்ற டிராக்டர் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுவன் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். உடனடியாக அந்த நபர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.