உத்தரபிரதேசத்தில் 2 சரக்கு ரெயில்கள் மோதி விபத்து
தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தின் காகா பகுதியில் உள்ள பாம்பிபூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது பின்னால் வந்த மற்றொரு சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரெயிலின் பாதுகாப்பு பெட்டியும், என்ஜினும் தடம் புரண்டன. இதனால் அப்பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சரக்கு ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 1 லோகோ பைலட்டு உள்பட 2 ரெயில்வே அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்துக்கான காரணம் பற்றி ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்னல் கோளாறு காரணமாக முதல் சரக்கு ரெயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தபோது 2-வது சரக்கு ரெயில் அதன் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.