'கங்கை நதிநீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை' - பீகார் சட்டசபையில் அறிக்கை தாக்கல்

பீகாரில் பெரும்பாலான இடங்களில் கங்கை நீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-03-03 04:00 IST

Image Courtesy : PTI

பாட்னா,

பீகார் மாநில சட்டசபையில் சமீபத்தில் 2024-2025 நிதியாண்டுக்கான பீகார் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பீகாரில் உள்ள கங்கை நதி நீரின் தரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

"பீகாரில் கங்கை நதியின் தரத்தை 34 இடங்களில் பீகார் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து வருகிறது. 2 வாரங்களுக்கு ஒருதடவை இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.

அதில், பீகாரில் பெரும்பாலான இடங்களில் கங்கை நதி நீரில் 'கோலிபாம்' என்ற பாக்டீரியா சார்ந்த நுண்கிருமிகள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், பீகாரில் பெரும்பாலான இடங்களில் கங்கை நீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை.

கங்கை மற்றும் அதன் உபநதிகளின் கரைகளில் அமைந்துள்ள நகரங்களில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும், சாக்கடையும் கங்கையில் கலப்பதுதான் இதற்கு காரணம் ஆகும். பாட்னா, பக்சார், சாப்ரா, பாகல்பூர், முங்கர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளன.

அதே சமயத்தில், கங்கை நதிநீரில் இருக்கும் இதர அளவீடுகள், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் இருக்கின்றன. அவை நீர்வாழ் உயிரினங்கள், வனவிலங்குகள், மீன்கள் ஆகியவற்றின் வாழ்வுக்கு உகந்ததாக இருக்கின்றன. நீர்ப்பாசனத்துக்கும் ஏற்றதாக இருக்கின்றன."

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்