கவர்னர் தபால்காரர் அல்ல: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பி சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.;
புதுடெல்லி,
சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கு உத்தரவிடக்கோரும் தமிழ்நாடு அரசின் ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து கடந்த ஏப்ரல் 8-ந்தேதி தீர்ப்பு கூறியது.
அந்த தீர்ப்பில் கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும். முடிவெடுக்காதபட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என்றும் தெரிவித்து இருந்தது. இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு ஆலோசனை கருத்தை பெறும் வகையில் ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பி சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பான மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துருக்கர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு நேற்று விசாரிக்க தொடங்கியது. அப்போது நீதிபதிகள், ‘ஜனாதிபதி சில கேள்விகளுக்கு ஆலோசனை கேட்டிருக்கும்போது தமிழ்நாடு, கேரள மாநிலங்களுக்கு என்ன பிரச்சினை?’ என்று கேள்வி எழுப்பினர். மேலும் ஜனாதிபதி எழுப்பிய ஆலோசனை கேள்விகளை விசாரித்து வருகிறோமே தவிர, தீர்ப்பை மாற்ற மாட்டோம். கருத்து மட்டுமே தெரிவிப்போம்’ என்று தெளிவுப்படுத்தினர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு விசாரணையை இன்றைக்கு (அதாவது புதன்கிழமை) தள்ளிவைத்தது.
அதன்படி, இன்றைய விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், “ஒரு மசோதா அனுப்பப்பட்டால் அதற்கு முடிவெடுக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. கவர்னருக்கு என்று சில அதிகாரங்கள் வகுக்கப்பட்டுள்ளன; அவர் தபால்காரர் அல்ல” என்று வாதிட்டார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “மசோதா நிறுத்தி வைக்கப்பட்டால் மசோதா செயல் இழந்துவிட்டது என்று கூறுவதை ஏற்க முடியாது. பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசானது, கவர்னரின் விருப்பபடிதான் செயல்படும் என்பதுபோல் ஆகிவிடும்” என்று கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து மனு மீதான விசாரணை நடந்து வருகிறது.