குஜராத்: தேனீக்களால் திக்குமுக்காடிய பயணிகள்; விமானம் 1 மணிநேரம் தாமதம்
தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு, அவர்கள் தண்ணீரை பயன்படுத்தி தேனீக்களை அப்புறப்படுத்தினர்.;
சூரத்,
குஜராத் மாநிலம் சூரத் நகரிலுள்ள விமான நிலையத்தில் இருந்து 6இ-784 என்ற எண் கொண்ட இண்டிகோ ஏர்பஸ் விமானம் ஒன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு புறப்படுவதற்காக தயாராக இருந்தது. விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறி, அமர்ந்து இருந்தனர்.
அப்போது, பயணிகளின் பொருட்களை வைக்க கூடிய பகுதியில் இருந்த கதவின் மூலையில் தேனீக்கள் சூழ்ந்திருந்தன. இதனால், அது எந்த நேரமும் ஊழியர்களை தாக்கலாம் என்ற அச்சம் எழுந்தது. இதனை தொடர்ந்து, புகையை பரப்பி அவற்றை விரட்ட முயற்சித்தனர்.
ஆனால், அது தோல்வியில் முடிந்தது. இதன்பின்னர், தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு, அவர்கள் தண்ணீரை பயன்படுத்தி தேனீக்களை அப்புறப்படுத்தினர். இதனால், ஏறக்குறைய ஒரு மணிநேரம் விமானம் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மாலை 4.20-க்கு புறப்பட வேண்டிய விமானம் மாலை 5.26 வரை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால், பயணிகள் திக்குமுக்காடி போனார்கள்.
இதேபோன்று, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சத்தீஷ்காரின் ராய்ப்பூருக்கு நேற்று காலை 6.35 மணிக்கு 51 பயணிகளுடன் 6இ-7295 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு அதற்கான அலாரம் அடித்தது. இதனால், விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, விமானம் மீண்டும் இந்தூர் விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது. பின்னர் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.