உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான் - அனுராக் தாகூர்
நமது பாரம்பரியம், அறிவு, கலாசாரத்தை பாட புத்தகங்களுக்கு அப்பால் தேட வேண்டும் என்று பாஜக எம்.பி. அனுராக் தாகூர் கூறியுள்ளார்.;
சிம்லா,
தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இமாச்சல பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் பாஜக எம்.பி அனுராக் தாகூர் பேசியதாவது:-
அப்போது மாணவர்களிடம், விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்? என கேள்வி எழுப்பினார். மாணவர்கள் ஒருமித்த குரலில் "நீல் ஆம்ஸ்ட்ராங்" என பதிலளித்தனர். அதற்கு அனுராக் தாக்கூர் "எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான்".
நாம் இன்றும் நம்மை தற்போதைய நிலையில் பார்க்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழமையான நம் பாரம்பரியம், அறிவு, கலாசாரம் பற்றி நாம் அறியாத வரை, ஆங்கிலேயர்கள் நமக்குக் காட்டியவாறே நாம் இருக்கிறோம். எனவே, பாடப்புத்தகங்களுக்கு அப்பால் சிந்தித்து, நமது தேசத்தையும், மரபுகளையும், அறிவையும் பார்க்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். அந்தத் திசையில் பார்த்தால், நீங்கள் நிறைய விஷயங்களைக் காண்பீர்கள் என்றார்.
1961ம் ஆண்டு சோவியத் ரஷ்யவின் வோஸ்டோக் 1 விண்கலம் மூலம் யூரி ககாரின் எனும் விண்வெளி வீரர் அதிகபட்சமாக 327 கி.மீ உயரத்திற்கு பறந்து சென்றார். 108 நிமிடங்கள் வரை அவர் விண்வெளியில் பூமியை சுற்றினார். பின்னர் பாதுகாப்பாக தரையிறங்கினார். ஆக வரலாற்று ரீதியில் முதல் விண்வெளி வீரர் சோவியத் யூனியனின் யூரி ககாரின்தான். இவரை தொடர்ந்து, நான்கு மாதங்களுக்குப் பிறகு, 1961ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வோஸ்டோக் 2 விண்கலத்தில் ஜெர்மன் டிட்டோவ் எனும் மற்றொரு சோவியத் வீரர் விண்வெளிக்கு சென்றார். இதன் பின்னர் 19 என மொத்தமாக அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங்குக்கு முன்னர் மொத்தம் 21 வீரர்கள் விண்வெளிக்கு பயணித்திருக்கிறார்கள். 1969ல்தான் நீல் ஆம்ஸ்ட்ராங் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.