அரியானா: அல்-பலா பல்கலைக்கழகத்தில் பதிவெண் இன்றி நிற்கும் மர்ம கார்; விசாரணைக்கு பறந்த போலீசார்

அரியானா போலீசின் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் அடங்கிய வாகனம் ஒன்று விசாரணைக்காக பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தது.;

Update:2025-11-13 20:00 IST

பரீதாபாத்,

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஹுண்டாய் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பயங்கரவாத தாக்குதலாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படும் இந்த சம்பவம் பற்றி என்.ஐ.ஏ. மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் நடந்ததும் அந்த இடத்தில் டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து டெல்லி விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி டாக்டர் உமர் உன் நபி டெல்லிக்குள் நுழையும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளிவந்துள்ளன. அதில், உமர் சுங்க சாவடியில் கட்டணம் செலுத்தும் காட்சிகள் தெளிவாக பதிவாகி உள்ளன. அவர் பதர்பூர் எல்லை வழியே ஐ20 காரில் வருவதும் தெரிகிறது. இதுபோன்று 50 சி.சி.டி.வி. காட்சிகள் சிக்கியுள்ளன.

இந்த வழக்கில், உமருடன் பிரெஸ்ஸா ரக கார் மற்றும் ரெட் ஈகோஸ்போர்ட் காரும் காணாமல் போயுள்ளன. எனினும், ரெட் ஈகோஸ்போர்ட் காரை பரீதாபாத் போலீசார் கைப்பற்றி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரியானாவின் பரீதாபாத் நகரில் தவுஜ் பகுதியில் அல்-பலா பல்கலைக்கழகம் உள்ளது. இதில் பிரெஸ்ஸா நிறுவன கார் ஒன்று சந்தேகத்திற்குரிய வகையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான தகவல் அரியானா போலீசுக்கு சென்றது.

இதனை தொடர்ந்து, அரியானா போலீசின் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் அடங்கிய வாகனம் ஒன்று விசாரணைக்காக பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்துள்ளது. இதுதொடர்பாக ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்