உத்தரகாண்டில் மேக வெடிப்பால் கனமழை; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடுகள்

கேதார்நாத் பள்ளத்தாக்கில் உள்ள லாவாரா கிராமத்தில் உள்ள பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது;

Update:2025-08-29 20:01 IST

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த பல நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் ருத்ரப்ரயாக் மற்றும் சாமோலி ஆகிய 2 மாவட்டங்களில் திடீரென்று மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் கனமழை பெய்தது.

குறுகிய நேரத்தில் அதிக அளவு மழை பெய்ததால் 2 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் பலர் குடும்பம் குடும்பமாக இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேவால் மொபாட்டா பகுதியில் தாராசிங் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போய்விட்டனர். விக்ரம் சிங் மற்றும் அவரது மனைவி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் அவர்களின் மாட்டுத் தொழுவமும் இடிந்து விழுந்தது. இதில் 15 முதல் 20 மாடுகள் மண்ணுக்குள் புதைந்தன. கார்களும் சேற்றில் சிக்கி கிடக்கின்றன.

மேக வெடிப்பின் தாக்கம் பல இடங்களில் கடுமையாக உள்ளது. ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் அலக்நந்தா மற்றும் மந்தாகினி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கேதார்நாத் பள்ளத்தாக்கில் உள்ள லாவாரா கிராமத்தில் உள்ள பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. செனகாட் பகுதியிலும் பொதுமக்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் ஆற்று வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ருத்ரப்ரயாக் பகுதியில் உள்ள அனுமான் கோவில் நீரில் மூழ்கியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-உத்தரகாண்ட் ருத்ரப்ரயாக் மாவட்டம் பசுகேதர் தாலுகா படேத் துங்கர் டோக் மற்றும் சாமோலி மாவட்டம் தேவால் பகுதியில், மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சில குடும்பங்கள் சிக்கியுள்ளதாக சோகமான செய்தி கிடைத்துள்ளது.

மீட்பு பணிகளை கையாள உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் நிர்வாகத்தால் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன். மீட்பு பணிகளை திறம்பட செயல்படுத்த தேவையான வழிமுறைகளை பேரிடர் மேலாண்மை செயலாளர் மற்றும் மாவட்ட நீதிபதியுடன் பேசியுள்ளேன்இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்