கேரள நர்ஸ் நிமிஷா பிரியா விவகாரத்தில் தலையிட்டது ஏன்? மதபோதகர் அபூபக்கர் பேட்டி
மனிதத்தன்மையின் முக்கியத்துவம் குறித்து கற்பிக்கும் மதம் இஸ்லாம் என்று மதபோதகர் அபூபக்கர் கூறியுள்ளார்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது 38). ஏமன் நாட்டில் ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்த இவர், அதேநாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஆஸ்பத்திரி தொடங்க திட்டமிட்டதாகவும், அதில் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்ததாகவும் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில், நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த ஏமன் கோர்ட்டு, 2020-ம் ஆண்டு நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதித்தது. அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏமன் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அவருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்ற தேதி குறிக்கப்பட்டது. இதற்கிடையே நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய அவரது தரப்பினர் மற்றும் இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை கையாண்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை.
இதையடுத்து நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஏமன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனையை நிறுத்தி வைத்த விவகாரத்தில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் காந்தபுரம் பகுதியை சேர்ந்த மதபோதகர் அபூபக்கர் முசலியார் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மனிதத்தன்மையின் முக்கியத்துவம் குறித்து கற்பிக்கும் மதம் இஸ்லாம். எனவே சாதி, மத வேறுபாட்டை தாண்டி மனிதன் என்ற நிலையில் நிமிஷா பிரியா விவகாரத்தில் தலையிட்டேன். அதன்படி அவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறுத்தி வைக்க உதவும்படி நான், ஏமன் நாட்டில் உள்ள முக்கிய மதபோதகர்களிடம் கேட்டுக்கொண்டேன். இதையடுத்து அவர்கள், அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேசி நிலவும் சிக்கல்களை கலைந்து நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க உதவினர். நான், ஏமன் நாட்டை சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது குறித்து பிரதமர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்து இருந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.