கத்தியால் கழுத்தை அறுத்து பெண் படுகொலை.. கள்ளக்காதல் காரணமா..?

இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் கணவரது நண்பர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2025-08-07 12:29 IST

ஹெப்பகோடி,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹெப்ப கோடியில் கத்தியால் கழுத்தை அறுத்து பெண் படுகொலை செய்யப்பட்டார். அவரது கணவரின் நண்பர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் பிஜோன் மண்டல். இவரது மனைவி மந்திர் மண்டல் (வயது 27). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளான். பிஜோன் மண்டல் தனது மனைவி மற்றும் மகனுடன் பெங்களூரு புறநகர் ஹெப்பகோடி போலீஸ் எல்லைக்குட்பட்ட திருபாளையாவில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார்.

பிஜோனின் நண்பர் சுமன் மண்டல் (28). இவரும் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பிஜோனும், மந்திரும் குடும்ப தகராறு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர்.

இதற்கிடையே கடந்த ஓராண்டுக்கு முன்பு பிஜோனும், சுமனும் வேலைக்காக அந்தமானுக்கு சென்றனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சுமன் மட்டும் பெங்களூருவுக்கு திரும்பி வந்தார். அவர் நேற்று முன்தினம் மாலை மந்திரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த சுமன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மந்திரின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் மந்திர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுமன், வீட்டின் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஹெப்பகோடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார், கொலையான மந்திரின் உடல் மற்றும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சுமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

என்ன காரணத்திற்காக சுமன், மந்திரை கொன்றுவிட்டு தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை. கள்ளக்காதல் விவகாரமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து ஹெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்