‘மோதல்கள் நிறைந்த உலகில் இந்தியா அமைதியை பரப்புகிறது’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
இந்தியாவின் 77-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
“இந்திய மக்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள். கடந்த ஆண்டு நவம்பர் 7-ந்தேதி முதல், நமது தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இயற்றப்பட்ட 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தியத் தாயின் தெய்வீக வடிவத்திற்கான ஒரு பாடலாக திகழும் ‘வந்தே மாதரம்’ பாடல், ஒவ்வொரு இந்தியரின் இதயங்களிலும் தேசபக்தியை விதைக்கிறது. தமிழ் கவிஞர் பாரதி, வந்தே மாதரம் பாடலுக்கு வலிமை சேர்த்துள்ளார். இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் நம் நாட்டை ஒன்றிணைத்தார்.
அரசியலமைப்பு சட்டம் என்பது இந்தியாவைப் போன்ற மிகப்பெரிய குடியரசு நாட்டின் அடிப்படை ஆவணமாகும். வறுமையில் இருந்து கோடிக்கணக்கான மக்களை மத்திய அரசு மீட்டுள்ளது. ஆதிவாசிகள் நலனுக்காக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்திய இளைஞர்கள் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் முன்னேற்றம் அடைகின்றனர். விளையாட்டுத் துறையில் மகளிர் சிறப்பாக செயல்படுகின்றனர். கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் மகள்கள் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையையும், பின்னர் பார்வையற்ற மகளிர் டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பையையும் வென்று வரலாறு படைத்தனர்.
நமது இந்திய சகோதர, சகோதரிகள் கடின உழைப்பால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புகிறார்கள். நமது நம்பிக்கைக்குரிய இளைஞர்கள் மற்றும் குழந்தைகள், அவர்களின் திறமைகள் மற்றும் பங்களிப்புகளால் பிரகாசமான எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறார்கள்.
இந்தியாவின் திறமை வாய்ந்த கலைஞர்களும், எழுத்தாளர்களும் நமது வளமான மரபுகளை நவீன சிந்தனையுடன் வெளிப்படுத்தி வருகின்றனர். பல துறைகளில் நிபுணர்கள் நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு வழிகாட்டுகின்றனர்.
நமது நாட்டை சுத்தமாக வைத்திருப்பதில் தூய்மை பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நமது அறிவொளி பெற்ற ஆசிரியர்கள் எதிர்கால சந்ததியினரை வடிவமைக்கின்றனர். அதே சமயம் உலகத்தரம் வாய்ந்த இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் நமது நாட்டின் வளர்ச்சியை வடிவமைக்கின்றனர்.
ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையினர் நமது துடிப்பான குடியரசை வலுப்படுத்துகிறார்கள். நமது முப்படைகளின் துணிச்சலான வீரர்கள் தாய்நாட்டைப் பாதுகாக்க எப்போதும் விழிப்புடன் இருக்கிறார்கள். அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள், நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தேசத்தைக் கட்டியெழுப்ப தங்கள் சேவைகளை அர்ப்பணிக்கின்றனர்.
அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, நமது வாக்காளர்கள் தங்கள் அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறார்கள். வாக்களிப்பதில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவது நமது குடியரசின் சக்திவாய்ந்த பரிமாணமாகும்.
‘பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்’ இயக்கம் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்துள்ளது. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனாவின் கீழ் இதுவரை 570 மில்லியனுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில், சுமார் 56 சதவீதம் பெண்களுடையதாகும்.
பொது சேவைக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மக்கள் பிரதிநிதிகள், நாட்டு மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப நலன் மற்றும் வளர்ச்சி இலக்குகளை அடைகிறார்கள். இவ்வாறு, விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் மிக்க குடிமக்கள் நமது குடியரசின் முன்னேற்றத்தை உறுதி செய்கிறார்கள்.
உலக அரங்கில் நமது நாட்டிற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெருமை சேர்க்கிறார்கள். நான் அவர்களை பாராட்டுகிறேன். மோதல்கள் நிறைந்த உலகில் இந்தியா அமைதியை பரப்புகிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.