பல தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவிக்கும்: பத்ம விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் - பிரதமர் மோடி
இந்தியா முழுவதும் மொத்தம் 131 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.;
புதுடெல்லி,
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி (ஜனவரி 26) பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. நம் நாட்டின் மிகவும் உயரிய விருது என்றால் அது பாரத ரத்னா. இதற்கு அடுத்ததாக பத்ம விருதுகள் உள்ளன. இந்த பத்ம விருதுகளில் 3 வகைகள் உள்ளன. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ என்ற 3 வகைகளில் இந்த விருதுகள் வழங்கப்படும். கலை, கல்வி, மருத்துவம், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, பொதுச் சேவை மற்றும் சமூகப் பணி போன்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்த விருதுகள் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 131 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள், 13 பேருக்கு பத்மபூஷண் விருதும், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்படுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், 2026-ம் ஆண்டுக்கான பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ள சாதனையாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
நமது நாட்டிற்கு சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக பத்ம விருதுகளை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். பல்வேறு துறை விருதாளர்களின் சிறப்பு, அர்ப்பணிப்பு, சேவை நம் சமூக கட்டமைப்பை வளப்படுத்துகிறது. அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் இந்த கவுரவம் பல தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவிக்கும் என பதிவிட்டுள்ளார்.