குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்

டெல்லியில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்து பேசினார்.;

Update:2026-01-25 20:37 IST

புதுடெல்லி,

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வான்டர் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அண்டோனியோ கோஸ்டா ஆகிய இருவரும் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.

தொடர்ந்து 27-ந்தேதி டெல்லியில் நடைபெறும் 16-வது இந்தியா-ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் அவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் ஊர்சுலா வான்டர் லெயன் மற்றும் அண்டோனியோ கோஸ்டா ஆகியோரை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று டெல்லியில் சந்தித்து பேசினார்.

இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வான் டெர் லேயனை இந்தியாவிற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

77-வது குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு அவர்களை தலைமை விருந்தினர்களாக கொண்டிருப்பது பெரிய பாக்கியம். பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர்கள் நிகழ்த்த இருக்கும் கலந்துரையாடல்கள் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான உறவுகளில் புதிய அத்தியாயத்தை பறைசாற்றும்” என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்