அமைச்சரவையின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு: மத்திய அரசு வாதம்

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் என்பது செய்திருக்கக் கூடாது என மத்திய அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.;

Update:2025-08-21 14:31 IST

புதுடெல்லி,

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கு உத்தரவிடக் கோரும் தமிழ்நாடு அரசின் ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து கடந்த ஏப்ரல் 8-ந்தேதி தீர்ப்பு கூறியது. அதில் கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதை எதிர்த்து மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என்றும் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு ஆலோசனை கருத்தை பெறும் வகையில் ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பி அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பான மனுவை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, அதுல் எஸ். சந்துருக்கர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு நேற்றுமுன்தினம் முதல் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் இன்று 3-வது நாளாக விசாரணை நடந்தது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் மசோதா அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக இருந்தாலும், தேசத்திற்கு எதிராக இருந்தாலும் அந்த மசோதா நிறுத்தி வைக்கப்படுகிறது. எல்லா விவகாரங்களிலும் கவர்னர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கும், ஆலோசனைகளுக்கும் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு. இருக்கக்கூடிய சிஸ்டத்திற்கு உள்ளாக நடைமுறைகளுக்கு உள்ளாக எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்பதே முக்கியமான விஷயம். கவர்னர் விவகாரத்திலும் ஏற்கனவே இருக்கக்கூடிய நடைமுறைக்கு உள்ளாகவே தீர்வு காணப்பட வேண்டும்.

அந்த வகையில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் என்பது செய்திருக்கக் கூடாது. ஏனெனில் நமது ஜனநாயகத்தில் அதிகார விவகாரங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த நிலையே தொடர வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. எனவே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடிய விவகாரத்தில் கால நிர்ணயம் வேண்டாம். அரசியலமைப்பு பிரிவு 200ன் கீழ் எந்த ஒரு கால நிர்ணயமும் செய்யப்படவில்லை. "as soon as possible" என்றுள்ளது. மேலும் நீதிமன்றமானது விவகாரத்தில் ஒரு கால வரம்பை நிர்ணயிக்கவும் முடியாது” என தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு அரசமைப்பில் இல்லை என்றால் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு ஒரு செயல்முறையை வகுக்க வேண்டும். மசோதா எப்படி செயல்வடிவம் பெறாமல் இருக்க முடியும்? எவ்வளவு நாட்களுக்கு முடிவில்லாமல் வைத்திருக்க முடியும்? கவர்னரின் செயல்படாத தன்மைக்கு எதிராக மாநில அரசுகள் நீதிமன்றத்தை அணுகினால் நீதிமன்றம் ஆய்வு செய்யாமல் இருக்க முடியுமா? தவறு நடந்திருந்தால் தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்தனர். அரசியலமைப்பு பணியாளர்கள் சரியான காரணமில்லாமல் செயல்படாமல் இருந்தால் நீதிமன்றங்களுக்கு தலையிட அதிகாரம் இல்லையா? நீதிமன்றங்களின் கைகள் கட்டப்பட்டுள்ளது என்று கூறமுடியுமா?” என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா: “சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் மசோதா, அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக இருந்தாலும், தேசத்திற்கு எதிராக இருந்தாலும் அந்த மசோதா நிறுத்தி வைக்கப்படுகிறது. அந்த மசோதா நீர்த்துப் போகிறது. சில மசோதாக்களில் ஆட்சேபம் இருந்தால் கவர்னர் அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைப்பார். கவர்னர் என்பவர் வெறும் காட்சிக்காக இருப்பவர் அல்ல. கவர்னர் என்பவர் மத்திய அரசின் பிரதிநிதி, ஆளுநருடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்.

ஆளுநர் மாநில அமைச்சர்களுக்கு ஒரு வழிகாட்டியாக நண்பராக இருப்பார். எல்லா விவகாரங்களிலும் ஆளுநர், மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கும் ஆலோசனைகளுக்கும் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு. ஆளுநர் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் உடனடியாக உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என்று அவசியம் இல்லை, அதற்கு பல தீர்வுகள் உள்ளன.

குறிப்பாக பிரதமர் அல்லது குடியரசுத் தலைவரை சந்தித்துக் கூட மாநில அரசின் பிரதிநிதிகள் முறையிடலாம். தொலைபேசி உரையாடல் வாயிலாக கூட முடிவு காண முடியும். அரசியல் முயற்சியால் ஆலோசனைகளின் மூலம் தீர்வு காண முடியும். நாட்டில் உள்ள பல பிரச்சனைகளுக்கு நீதித்துறை ஒன்றே தீர்வு என்று இல்லை” என்றார்.

தலைமை நீதிபதி:

“இந்த நீதிமன்றம் அரசியலமைப்பின் ஒரு அங்கம். ஒரு அரசியலமைப்புச் சட்டப் பணியாளர் சரியான காரணங்கள் இல்லாமல் பணிகளைச் செய்யவில்லை என்றால் நீதிமன்றம் நாங்கள் சக்தியற்றவர்கள் என்றும் எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது என்றும் கூற வேண்டுமா?”

நீதிபதி நரசிம்மா:

“காலக்கெடு இல்லையென்றால் ஏதாவது ஒரு நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். எவ்வளவு காலத்திற்கு மசோதா மீது முடிவெடுக்காமல் இருக்க முடியும்?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். தொடர்ந்து மத்திய அரசு வழக்கறிஞர் கூறுகையில், “ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்குமாறு குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவுகளை மதிக்கிறேன், ஆனால் இதுபோன்று ஒரு வரம்பை குடியரசுத் தலைவருக்கு நீதித்துறை வழங்க முடியாது” என்றார். இவ்வாறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்