கரூர் துயரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு வேதனை
கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்தார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 36 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த துயரச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.