காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல்

கவர்னர் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில், ராணுவத்தின் வடக்கு தளபதி, டி.ஜி.பி. மற்றும் தலைமை செயலாளர் கலந்து கொண்டனர்.;

Update:2025-09-27 18:27 IST

அனந்த்நாக்,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் தாக்கி தகர்க்கப்பட்டன.

இந்நிலையில், காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு இருந்தன. இதனால் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை குறைந்தது.

இந்த நிலையில், காஷ்மீர் மண்டலத்தில் ஆரு பள்ளத்தாக்கு, ராப்டிங் பாயிண்ட் யான்னர், ஆக்கத் பார்க், பாத்ஷாஹி பூங்கா, கமன் போஸ்ட் உள்பட 7 சுற்றுலா தலங்களும் மற்றும் ஜம்மு மண்டலத்தில், தகன் டாப், ராம்பன் உள்பட 5 இடங்களும், கத்துவா பகுதிக்கு உட்பட்ட தக்கார், சலால் பகுதியில் உள்ள சிவ குகை, ரியாசி பகுதியிலும் வருகிற திங்கட்கிழமை (29-ந்தேதி) முதல் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. ஜம்மு மற்றும் காஷ்மீரின் லெப்டினென்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா இதற்கான ஒப்புதலை அளித்துள்ளார்.

இந்த பகுதியில், பாதுகாப்பு சூழ்நிலையை மறுஆய்வு செய்வதற்காக ஸ்ரீநகரில் உள்ள கவர்னர் மாளிகையில், ஒருங்கிணைந்த தலைமையகத்தில் கவர்னர் தலைமையில் நேற்று கூட்டம் ஒன்று நடந்தது. இதில், ராணுவத்தின் வடக்கு தளபதி, டி.ஜி.பி., தலைமை செயலாளர் மற்றும் பிற முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இந்த தகவலை கவர்னர் அலுவலகமும் உறுதி செய்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிக அடிப்படையில் மூடப்பட்டு இருந்த இந்த சுற்றுலா தலங்களை, முழு அளவிலான பாதுகாப்பு மறுஆய்வு மற்றும் ஆலோசனைக்கு பின்னர், மீண்டும் திறக்க நான் உத்தரவிட்டு உள்ளேன் என்று கவர்னர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்