'பி.எம்.ஸ்ரீ' திட்டத்தில் இணைந்தது கேரளா... மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து
'பி.எம்.ஸ்ரீ' திட்டத்தில் கேரளா இணைந்து மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.;
திருவனந்தபுரம்,
கேரளாவில் பினராயி விஜயனின் தலைமையிலான அரசு தேசிய கல்வி கொள்கையை வலியுறுத்தும் விதத்தில் உள்ளதாக கூறி மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைய எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்த நிலையில் பிரதம மந்திரியின் ஸ்ரீ திட்டத்தில் சேர மத்திய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரள மாநில அரசு நேற்று கையெழுத்திட்டுள்ளது.இதுகுறித்து மாநில கல்வி மந்திரி சிவன்குட்டி கூறுகையில், “தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தாலும் பிரதமரின் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட கேரள அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் நிதி உதவியைப் பெறுவதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சமக்ர சிக்ஷா நிதி உள்பட மத்திய அரசிடம் இருந்து குறைந்தது ரூ.1,500 கோடி வர வேண்டி உள்ளது. நமது மாணவர்களுக்கான மத்திய நிதியை தொழில்நுட்ப காரணங்களுக்காக இழக்க வேண்டிய அவசியம் இல்லை“ என தெரிவித்தார்.