லடாக்: லே பகுதியில் ஊரடங்கு தளர்வு; கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்

லே நகரின் புதிய பகுதியில், பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.;

Update:2025-09-27 17:13 IST

லே,

லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்​து வழங்க கோரியும், அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும் பரு​வநிலை செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் கடந்த 2 வாரங்​களாக உண்​ணா​விரதம் மேற்கொண்டு வந்​த நிலை​யில் அவரது போராட்​டத்​துக்கு ஆதரவு அளிக்​கும் வகையில் லடாக்கில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடப்பட்டது.

‘லே அபெக்ஸ் பாடி' என்ற அமைப்​பின் இளைஞர் அணி விடுத்த இந்த அழைப்பு வன்முறையில் முடிந்தது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானார்கள். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட லடாக்கில் காவல் துறை பரிந்துரையின் பேரில், காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். கற்களை வீசியும், வாகனங்களை தீ வைத்து கொளுத்தியும் வன்முறையில் இறங்கினர். இதனால், அரசு கட்டிடங்கள், பா.ஜ.க. அலுவலகம் தாக்கப்பட்டன.

அவர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில், 17 போலீசார் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், லடாக் டி.ஜி.பி.யான எஸ்.டி. சிங் ஜம்வால் கூறும்போது, ஊரடங்கில் பகுதி வாரியாக தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, பழைய நகரில், மதியம் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும் மற்றும் புதிய பகுதியில், பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை முன்னிட்டு, லே பகுதியில் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பிற பொருட்களை வாங்க மக்கள் சந்தைகளில் அதிகளவில் குவிந்தனர். எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்