மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு; நாடாளுமன்றத்தில் விவாதிக்க பிஜு ஜனதா தளம் வலியுறுத்தல்
ஒடிசாவில் பா.ஜ.க. அரசு உதவியற்றதாகவும், தோல்வியடைந்த அரசாகவும் உள்ளது என பிஜு ஜனதா தளம் கட்சி விமர்சித்துள்ளது.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21-ந்தேதி(நாளை) தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, டெல்லியில் மத்திய மந்திரி ஜே.பி. நட்டா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு பிஜு ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யும், செய்தி தொடர்பாளருமான சஸ்மித் பத்ரா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"பா.ஜ.க. ஆட்சியின் கீழ் ஒடிசாவில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சனிக்கிழமை ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் சில குற்றவாளிகளால் 15 வயது சிறுமி தீவைத்து எரிக்கப்பட்டார். அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலசோர் மாவட்டத்தில் மாணவி ஒருவர் சமீபத்தில் தீக்குளித்த சம்பவம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, ஒடிசாவின் கோபால்பூர் கடற்கரையில் 20 வயது கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஒடிசாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் கொடூரமான குற்றங்களைப் பற்றி என்னால் தொடர்ந்து பேச முடியும். மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. அரசு உதவியற்றதாகவும், தோல்வியடைந்த அரசாகவும் உள்ளது.
மற்ற மாநிலங்களிலும் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.