சிறிய தவறுகள் மிகைப்படுத்தப்படுகின்றன - மத்திய மந்திரி சுரேஷ் கோபி
சேதம் அடைந்த வீட்டை கட்டி தர வேண்டும் என்று சுரேஷ் கோபியிடம் முதியவர் ஒருவர் கோரிக்கை வைக்க, அது நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.;
திருவனந்தபுரம்,
கேரளாவில் பா.ஜ.க-வின் முதல் நாடாளுமன்றத் தொகுதி திருச்சூர். மக்களவைத் தேர்தலில் நடிகர் கோபி வெற்றி பெற்றதற்கான காரணங்களில் முக்கியமானது, அவர் பல ஆண்டுகளாகச் சமூகப் பணிகளின் மூலம் மக்களின் அன்பைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் பலரும் அவரிடம் பலக் கோரிக்கைகளை முன்வைப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில், கேரள மாநிலம் திருச்சூரில், உள்ளூர் வளர்ச்சிப் பிரச்சினைகளை அடையாளம் காண தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தி வருகிறார்.
அதன் அடிப்படையில் செப்டம்பர் 12 அன்று, கொச்சு வேலாயுதன் என்ற 80 வயது முதியவர், மத்திய இணை மந்திரி சுரேஷ் கோபியிடம், ``இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓடு வேயப்பட்ட என் வீட்டின் மீது மரம் விழுந்ததால் அது சேதமடைந்துவிட்டது. சேதமடைந்த வீட்டின் அருகே அமைக்கப்பட்ட ஒரு தற்காலிக குடிசையில் தான் வசித்து வருகிறேன். எனக்கு என் வீட்டை பழுதி நீக்கித் தரவேண்டும்" என்றார்.
இந்தக் கோரிக்கையை மந்திரி சுரேஷ் கோபி நிராகரித்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதியவர் கொச்சு வேலாயுதம், சுரேஷ் கோபி மனுவை ஏற்கவே இல்லை. வீடு கட்டிக் கொடுப்பது பஞ்சாயத்தின் வேலை. அது அவரது வேலை இல்லை எனக் கூறிவிட்டார். அவர் மந்திரி என்பதால்தான் அவரிடம் கோரிக்கை வைத்தேன். நான் அவரை கட்டாயப்படுத்தவில்லை.
அவர் கட்டிக்கொடுக்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் என் ஆவணத்தையாவது ஏற்றிருக்கலாம்" என்றார். இந்த செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானதால், முதியவர் வேலாயுதிற்கு சிபிஐ(எம்) கட்சியினர் அணுகி, அவருக்கு வீடு கட்டி தரப்படும் என அறிவித்தது.
இந்தநிலையில், சிலர் "அரசியல் ஆதாயம்" பெறுவதற்காக தனது தரப்பில் சில தற்செயலான நடக்கும் தவறுகளை மிகைப்படுத்த முயற்சிப்பதாக சுரேஷ் கோபி குற்றம் சாட்டினார்.
இது குறித்து தனது தொகுதியில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் பேசிய சுரேஷ் கோபி,
அவர்கள் தங்கள் அரசியல் பிரசாரத்தை மேற்கொள்ளட்டும். ஆனால் எனக்குள் இருக்கும் சுடரை ஒருபோதும் அணைக்க முடியாது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். வீடு தேவைப்படும் பிற நபர்களின் பட்டியலைத் தயாரித்து அவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன். இந்தப் பட்டியலில் உள்ளவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற அவர்கள் முன் வரவேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டியது மாநில அரசுதான். மக்களுக்கு தவறான நம்பிக்கைகளை வழங்குவது எனது வழி அல்ல என்றார்.