மிசோரம்: ரூ.302 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்
20.304 கிலோ எடை கொண்ட ரூ.300 கோடி மதிப்பிலான மெத்தம்பிடமைன் கடந்த 1-ந்தேதி லாரி ஒன்றில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.;
அய்சாவல்,
மிசோரமில் கடந்த 2 வாரங்களில் ரூ.302 கோடி மதிப்பிலான சட்டவிரோத போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுபற்றி மிசோரம் ஐ.ஜி. ராம்த்லெங்கிலியானா கூறும்போது, போதை பொருட்கள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான தளர்வில்லாத நடவடிக்கைகள் தொடரும். சமீபத்தில், பல்வேறு இடங்களில் மிசோரம் போலீசார் போதை பொருட்களை பறிமுதல் செய்து முக்கியம் வாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்றார்.
இது தொடர்பாக சகாப் உத்தீன் (வயது 41), இமானுவேல் ரெம்னலால்லியானா (வயது 25) மற்றும் லால்பியாக்சியாமா (வயது 23) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், 6-ந்தேதி வாகனம் ஒன்றில் இருந்து 1.053 கிலோ எடை கொண்ட ரூ.31.59 லட்சம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. 9-ந்தேதி கார் ஒன்றில் 3.93 கிலோ எடை கொண்ட ரூ.51.09 லட்சம் மதிப்பிலான மெதம்பிடமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
எனினும், கடந்த 1-ந்தேதி லாரி ஒன்றில் 20.304 கிலோ எடை கொண்ட ரூ.300 கோடி மதிப்பிலான மெத்தம்பிடமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இது மிக பெரிய நடவடிக்கை ஆகும். இந்த சம்பவத்தில் லாரி ஓட்டுநர் லால்தஜுவாலா (வயது 45) என்பவர் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, முக்கிய நபரான பவிலியன்தங் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.