ம.பி.: நவராத்திரி விழாவில் சோகம்; டிராக்டர் நீரில் மூழ்கி 11 பேர் பலி
ஐ.ஜி. (இந்தூர் சரகம்) அனுராக் கூறும்போது, ஏரிக்குள் விழுந்தவர்களில், 6 பேர் நீந்தி கரை சேர்ந்தனர் என கூறினார்.;
இந்தூர்,
வடமாநிலங்களில் நவராத்திரி திருவிழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக விஜயதசமி கொண்டாட்டங்கள் இன்று நடந்தன. இதில், மத்திய பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக துர்க்கை சிலைகளை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
இதன்படி, டிராக்டர் ஒன்றில் துர்க்கை சிலைகளை ஏற்றியபடி பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது, அந்த டிராக்டர் பந்தனா பகுதிக்கு வந்தபோது, திடீரென ஏரிக்குள் சரிந்தது. இந்த சம்பவத்தில், பக்தர்கள் சிலைகளுடன் ஏரியில் விழுந்தனர். இதுபற்றி ஐ.ஜி. (இந்தூர் சரகம்) அனுராக் கூறும்போது, ஏரிக்குள் விழுந்தவர்களில், 6 பேர் நீந்தி கரை சேர்ந்தனர். எனினும், பலர் நீரில் மூழ்கினர்.
இதுவரை, 9 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன என கூறினார். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. இதற்காக மாநில பேரிடர் மீட்பு படையினர் கூடுதலாக வரவழைக்கப்பட்டு உள்ளன.