மும்பை ரெயில் குண்டு வெடிப்பு வழக்கு: 12 பேர் விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை

மும்பை ரெயில் குண்டு வெடிப்பில் 12 பேரின் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.;

Update:2025-07-24 13:00 IST

புதுடெல்லி,

மும்பையில் 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடந்த தொடர் ரெயில் குண்டு வெடிப்பில் 180-க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். சுமார் 700 பேர் படுகாயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் 13 பேரை கைது செய்தனர்.

பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 'சிமி' பயங்கரவாத இயக்கத்தினர் இந்த மிருகத்தனமான தாக்குதலை நடத்தியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைதான 12 பேர் குற்றவாளிகள் என கடந்த 2015-ம் ஆண்டு மும்பை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதில் 5 பேருக்கு தூக்கு தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. ஒருவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த தண்டனையை எதிர்த்து 12 பேரும் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இதை கடந்த இரு தினங்களுக்கு முன் விசாரித்த மும்பை ஐகோர்ட்டு 12 பேரையும் விடுதலை செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதில் தூக்கு தண்டனை பெற்ற ஒரு கைதி விசாரணை காலக்கட்டத்தில், அதாவது கடந்த 2021-ம் ஆண்டு உயிரிழந்தார். அவர் இறந்த நிலையில் அவரது தண்டனையையும் ஐகோர்ட்டு ரத்து செய்தது.

இதையடுத்து மும்பை ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் 12 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அவசரமாக மராட்டிய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. தங்களது மேல்முறையீடு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் வினோத் சந்திரன், என்.பி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு மராட்டிய அரசின் கோரிக்கையை கவனத்தில் எடுத்துக்கொண்டது. ஐகோர்ட்டு தீர்ப்பு வெளியானவுடன் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய 8 பேர் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பான பத்திரிகை செய்தியை தலைமை நீதிபதி குறிப்பிட்டார். இதையடுத்து மும்பை ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் மாநில அரசின் மேல்முறையீடு மனுவை இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி, இந்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேரை விடுதலை செய்த ஐகோர்ட்டு உத்தரவுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர். மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி, மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பை ஒரு முன்னுதாரணமாகக் கருத முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்