கயிற்றால் மனைவியை கட்டி, நிற்க வைத்து, பெல்ட்டை கழற்றி.. பக்கத்து வீட்டுக்காரர்கள் அதிர்ச்சி; வைரலான வீடியோ
கிராமத்திற்கு வரும்போது மனைவியிடம் செலவுக்கு பணம் வாங்கி விட்டு சென்று விடுவார்.;
பிரகாசம்,
ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் கலுஜுவலபாடு பகுதியில் வசித்து வருபவர் குருநத்தம். இவர், மனைவி லட்சுமியை விட்டு விட்டு, ஐதராபாத் நகரில் வேறொரு பெண்ணுடன் தனியாக குடும்பம் நடத்தி வருகிறார்.
இவருடைய மனைவி 4 குழந்தைகளுடன் கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். அருகேயுள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து 4 குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறார். குருநத்தம், அவ்வப்போது குடும்பத்தினரை பார்க்க கிராமத்திற்கு வருவார். அப்போது மனைவியிடம் இருந்து செலவுக்கு பணம் வாங்கி விட்டு சென்று விடுவார்.
இந்நிலையில், அவர் மனைவியை கயிற்றால் கட்டி நிற்க வைத்து, பெல்ட்டை கழற்றி அடித்துள்ளார். இதனால் வலி பொறுக்காமல், குருநாதத்தின் மனைவி அலறி துடித்துள்ளார்.
அவருடைய அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னவென்று பார்க்க ஓடி வந்தனர். அப்படி வந்தவர்களில் ஒருவர் இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து உள்ளார்.
அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், மனைவியின் இரு கைகளையும் கயிற்றால் கட்டி, பெல்ட்டால் அடித்தும், கால்களால் உதைத்தும் கடுமையாக தாக்கும் காட்சிகள் உள்ளன.
அவரை அண்டை வீட்டுக்காரர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். எனினும் அப்போதும் விடாமல் அவர் தாக்குதலில் ஈடுபட்டார். செலவுக்கு பணம் தரும்படி கேட்டபோது, இப்போது பணம் இல்லை என கூறிய ஆத்திரத்தில் அவர் மனைவியை தாக்கியுள்ளார் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.