இன்ஸ்டாகிராமில் வருகிறது புதிய கட்டுப்பாடு: இனி லைவ் வசதி அனைவருக்கும் இல்லை
இன்ஸ்டாவில் உள்ள லைவ் வசதியை இனி அனைவரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சில விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது.;
representation image (Meta AI)
ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரித்துவிட்ட இந்தக் காலத்தில் சமூக வலைத்தளங்கள் இளையசமூகத்தினர் மத்தியில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்றால் அது மிகையல்ல. வாட்ஸ் அப், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை விட இன்ஸ்டாகிராம்தான் அதிக அளவில் தற்போது பிரபலம் ஆகி வருகிறது. இன்ஸ்டாகிரம் செயலியை பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று சொல்லும் அளவுக்கு அனைவர் மத்தியிலும் இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலமாக உள்ளது. இந்தியாவில் மட்டும் 43 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ள அமெரிக்காவில் இந்தியாவை விட பாதிக்கு பாதி குறைவாக 17 கோடி பேர் மட்டுமே பயன்படுத்துவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புதிய அப்டேடுகளை அதன் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் ஒரு முக்கிய மாற்றத்தை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது. அதாவது, இன்ஸ்டாவில் உள்ள லைவ் வசதியை இனி அனைவரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சில விதிமுறைகளை மாற்றியுள்ளது. இனிமேல், குறைந்தபட்சம் 1,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட பொது கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே லைவ் வீடியோக்களை வெளியிட முடியும். தற்போது வரை எந்தவொரு பயனரும், லைவ் வசதியை பயன்படுத்தும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் அனுமதித்திருந்தது.