செல்லப்பிராணி நாயை கிண்டல் செய்த பக்கத்து வீட்டுக்காரரின் மூக்கை அறுத்த சகோதரர்கள்

தாக்குதல் நடத்திய சகோதரர்கள் சதீஷ், அமித்தை கைது செய்துள்ளனர்.;

Update:2025-07-18 17:11 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் சதீஷ். இவரது சகோதரர் அமித். அமித்திற்கு திருமணமாகி துஷார் என்ற மகன் உள்ளார். இதனிடையே, அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சகோதரர்கள் தங்கள் வீட்டில் செல்லப்பிராணி நாய் வளர்த்து வந்தனர். இதனிடையே, சதீசின் பக்கத்து வீட்டுக்காரர் தேவேந்திரா. இவரது மனைவி முன்னி தேவி.

இந்நிலையில், சதீஷ் வீட்டில் வளர்த்துவந்த செல்லப்பிராணி நாய் கடந்த 8ம் தேதி தேவேந்திரா வீட்டின் அருகே நின்று குரைத்துள்ளது. இதையடுத்து, அந்த நாயை கிண்டல் செய்து தேவேந்திரா பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் தனது சகோதரன் அமித் உடன் சேர்ந்து தேவேந்திரா வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு தேவேந்திரா மற்றும் அவரது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சகோதரர்கள் அவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும், அங்கிருந்த கத்தியை கொண்டு தேவேந்திராவின் மூக்கை சகோதரர்கள் அறுத்துள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து, தாக்குதலில் காயமடைந்த தேவேந்திரா மற்றும் அவரது மனைவியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதல் நடத்திய சகோதரர்கள் சதீஷ், அமித்தை கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்