அமீபா மூளைக்காய்ச்சல் நோய்க்கு கேரளாவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா மூளைக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.;
திருவனந்தபுரம்
கேரள மாநிலத்தில் மக்களை பல்வேறு நோய்கள் சமீபகாலமாக ஆட்டிப்படைத்து வருகிறது. அங்கு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து மூளையை தின்னும் அமீபா மூளைக்காய்ச்சல் என்ற அரிய வகை தொற்று நோய் பரவி வருகிறது. கோழிக்கோடு, திருவனந்தபுரம், வயநாடு, மலப்புரம், கொல்லம் பகுதிகளில் இந்த நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. கிணறுகள் மற்றும் குளங்களில் மாசுபட்ட நீரில் வாழும் இந்த அமீபா, குளிப்பது அல்லது அதில் முகத்தை கழுவுவதன் மூலம் மூக்கின் வழியாக மனித மூளைக்குள் நுழைந்து அங்குள்ள திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு வழிவகுக்கிறது. ஆபத்தான மூளை உண்ணும் அமீபா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்து வருகிறது.
தற்போது கோழிக்கோடு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தொற்றுக்காக 10 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோழிக்கோடு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆஷாஜி (வயது 47) என்பவர் உயிரிழந்தார். இவர் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள செலம்ப்ராவை சேர்ந்தவர். கடந்த மாதம் 9-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.கடந்த ஒரு மாதத்தில் மாதத்தில் இந்த காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3 வாரங்களில் கோழிக்கோட்டை சேர்ந்த 3 மாத குழந்தை உள்பட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மூளைக்காய்ச்சல் அமீபா நோயால் பாதிப்பவர்கள் அதிரித்து வருவதால் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் கிணறுகள், குளங்களில் குளோரின் மருந்து தெளித்தல் உள்ளிட்ட துப்புரவு பணிகளை மேற்கொண்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் தீவிரப்படுத்த்தி உள்ளனர்.