‘ஆபரேஷன் சிந்தூர்' சிவில்-ராணுவ இணைப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு - ராஜ்நாத் சிங்

‘வளர்ந்த இந்தியா’ என்ற இலக்கை விரைவுபடுத்துவதில் சிவில் சர்வீஸ் பணியாளரக்ள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.;

Update:2025-11-29 18:12 IST

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் (LBSNAA) 100-வது பொது அறக்கட்டளை பாடநெறியின் நிறைவு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“சிவில் சர்வீஸ் பணியாளர்கள் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் தங்கள் முக்கிய பங்கைப் புரிந்துகொண்டு, துணிச்சலான வீரர்களைப் போலவே, நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். ‘ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை சிவில்-ராணுவ இணைப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

அந்த சமயத்தில் அரசின் நிர்வாக இயந்திரம் ஆயுதப்படைகளுடன் இணைந்து செயல்பட்டு, முக்கிய தகவல்களை கடத்தவும், பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் உதவியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது, ​​பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை நமது ராணுவம் அழித்தது.

2047 ஆம் ஆண்டுக்குள் 'விக்சித் பாரதம்'(வளர்ந்த இந்தியா) என்ற இலக்கை அடைய ஆட்சிக்கும், தேசிய பாதுகாப்புக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை அதிகரிக்க வேண்டும். சுயசார்பு மற்றும் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை விரைவுபடுத்துவதில் சிவில் சர்வீஸ் பணியாளரக்ள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

அதிகாரிகள் சமூகத்தின் பின்தங்கிய அல்லது பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்பு கொள்ளும்போது, ​​மக்களின் கஷ்டங்கள் அவர்களின் செயல்களால் மட்டுமல்ல, பரந்த சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைகளாலும் வடிவமைக்கப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதுவே ஒரு நிர்வாகியை மக்கள் சார்ந்த நபரகாகவும், இரக்கமுள்ளவராகவும் ஆக்குகிறது.

சிவில் சர்வீஸ் பணிகளில் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. சமீபத்திய யு.பி.எஸ்.சி. தேர்வில், ஒரு பெண் முதலிடத்தைப் பிடித்தார், மேலும் முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களில் 3 பேர் பெண்கள். 2047 ஆம் ஆண்டுக்குள், பல பெண்கள் அமைச்சரவை செயலாளர் பதவிகளுக்கு உயர்ந்து இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை வழிநடத்துவார்கள் என்று நம்புகிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்