துணிக்கடைக்குள் உரிமையாளர்- பெண் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை
திவ்யாமோளுக்கும் திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அலி (வயது 38). இவர் கொல்லம் மாவட்டம் ஆயூரில் துணிக்கடை நடத்தி வந்தார். இவருடைய கடையில் பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த திவ்யாமோள் (38) மேலாளராக வேலை பார்த்தார். இந்தநிலையில் வழக்கம்போல் மற்ற ஊழியர்கள் கடையை அடைத்த பிறகு அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர். ஆனால் திவ்யா மோள் மட்டும் வீட்டிற்கு செல்லவில்லை.
வழக்கமாக அலி மற்றும் திவ்யாமோள் ஆகிய இருவரும் துணிகளை மொத்தமாக கொள்முதல் செய்ய சேர்ந்து பெங்களூரு, கோயம்புத்தூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். அதுபோல ஓணம் விற்பனைக்காக இருவரும் துணிகளை கொள்முதல் செய்ய வெளியூர் சென்றிருக்கலாம் என்று வீட்டில் உள்ளவர்கள் நினைத்தனர். இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று காலை கடைக்கு மற்ற ஊழியர்கள் வேலைக்கு வந்தனர். ஆனால் கடை திறக்கப்படவில்லை. மாறாக கடை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
உடனே இதுகுறித்து ஊழியர்கள் சடயமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, துணிக்கடையின் உரிமையாளர் அலியும், மேலாளர் திவ்யாமோளும் கடைக்குள் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தனர்.
இதையடுத்து இருவரது உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அலிக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இதேபோல் திவ்யாமோளுக்கும் திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.